கார்த்தியின் விருமன் விமர்சனம்!
விருமன் விமர்சனம்!
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து ஆகஸ்ட் 12ல் திரைக்கு வந்துள்ள விருமன் விமர்சனம்!
கிராமத்துப் பின்னணியில் கொஞ்சம் சென்டிமென்ட், குடும்பம்னா... என நெஞ்சை உருக்கும் வசனங்கள், குறிப்பிட்ட சாதிப் பெருமை, புழுதி பறக்கும் சண்டைக்காட்சி, காதல் என முத்தையா படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அப்படியே இருக்கிறது விருமன்.
கிராமத்துப் படங்களில் கபடி போட்டி, உறியடித்தல், ஜல்லிக்கட்டு என நாயகனின் அறிமுகம், கையில் தீபத்தை ஏந்தி வரும் நாயகியின் அறிமுகம் இதெல்லாம் இந்தப் படத்திலும் இருக்கிறது. ''நல்ல புள்ளைய பெக்கல, நல்லவனையே புள்ளையா பெத்துருக்க'' இதுபோன்ற நெஞ்சைப் பிழியும் வசனங்கள் படம் முழுக்கவே இருக்கின்றன.
இத்தனைக்கும் நடுவே விருமன் படத்தில் தனித்துவமாகத் தெரிவது கார்த்தி, பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் ஆகியோரின் நடிப்பு, செல்வகுமாரின் ஒளிப்பதிவு மற்றும் யுவனின் இசை.
தேனி மாவட்டத்தின் அழகைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்வகுமார். கார்த்தி பேட்டிகளில் சொன்னதுபோல பெரும்பாலான காட்சிகளை வைட் ஷாட்டில் காட்டிக் கவர்கிறார்.
யுவன் இசையில் பாடல்கள் ஏற்கெனவே வெற்றிபெற்றுவிட்டன. பாடல்கள் படமாக்கப்பட்ட விதம், குறிப்பாக பாபா பாஸ்கர், சாண்டி, ஜானி, ஷோபி ஆகியோரின் நேர்த்தியான நடன அமைப்பு நன்றாக இருந்தது.
நீண்ட நாட்களுக்கு பிறகு முழு கமர்ஷியல் படத்தில் கார்த்தி. இதற்காகத்தானே காத்திருந்தேன் என்பது போல இறங்கி அடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜுக்கும் தமிழில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வில்லன் வேடம். ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், வடிவுக்கரசி போன்றோர் தங்கள் அனுபவ நடிப்பால் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
சூரி படம் முழுக்க கார்த்தியுடன் வருகிறார். டப்பிங்கில் சில வசனங்களை அவர் பேசுவதற்காகவே சேர்த்திருக்கிறார்கள். அது ஒருசில இடங்களில் கைகொடுத்துள்ளது. ஆர்.கே. சுரேஷின் தோற்றம் மாறியிருக்கிறதே தவிர கதாபாத்திரம் மாறவில்லை.
நாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் அதிதி சங்கர். நடிப்பதற்கு பெரிதான வாய்ப்பு இல்லை. முதல் படம் என்பதால் பெரிதாக எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. சொந்தக் குரலில் பேசியிருக்கிறார். நடனத் திறனால் பாடல் காட்சிகளில் பெரிதும் கவர்கிறார்.
வன்முறையை ஆதரிப்பது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். காட்சிகளை முன்பே கணிக்க முடிவது படத்தின் பெரும் குறை. முதலிலேயே சொன்னது போல, பாசம்னா என்ன தெரியுமா, அப்பான்னா எப்படி இருக்கணும், உறவுன்னா... என காட்சிக்குக் காட்சி வகுப்பெடுக்கிறார்கள்.
குறிப்பாக இறுதிக்காட்சியில் கார்த்தியும், பிரகாஷ் ராஜும் பேசும் காட்சிகள் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் அவ்வளவு மோசமான அப்பாவாக காட்டப்படும் பிரகாஷ்ராஜைக் கார்த்தி கையாளும் விதத்தை நம்ப முடியவில்லை.
மொத்தத்தில் எந்த புதுமைகளும் இல்லாத, ஆனால், வழக்கமான இயக்குநர் முத்தையாவின் குடும்ப காவியம் இந்த விருமன்!
Comments
Post a Comment